November 26, 2014

மாவீரர் சார்ந்த பணிகளை முன்னெடுக்கின்ற ஒரு பொது அமைப்பு கீழ் ஒன்றுபடுங்கள் – கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவத்தின் வேண்டுகோள்!

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், கனடிய மண்ணில் மாவீரர் சார்ந்த பணிகளை முன்னெடுக்கின்ற ஒரு பொது அமைப்பு ஆகும்.
ஒன்பது இயக்குநர்களையும், இருபத்தொரு உறுப்பினர்களையும் கொண்ட இக் கட்டமைப்பு. கனடியச் சட்ட விதிகளுக்கமையப் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு தேசியக் கட்டமைப்பு ஆகும். மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் தமது இன்னுயிர்களை
ஈகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளான நவம்பர் 27 வீர வணக்க நாளை கனடா வாழ் ஈழத் தமிழ் மக்கள் அனைவரதும் முழுமையான ஒத்துழைக்போடு ஆண்டு தோறும் முன்னெடுப்பதே இதன் முதன்மையான பணி ஆகும். பொதுக் கட்டமைப்பான கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவத்தில் இணைந்து கொண்டு மாவீரர் சார்ந்த பணிகளைச் செய்வதற்கு ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் அகவத்தின் உறுப்பினர்களாக இணைந்து கொள்ளலாம். தமிழ் ஊடகவியலாளர்கள் அனைவரும் அகவத்தின் உறுப்பினர்களாக இணைந்து கொள்வது, எதிர் கால அகவத்தின் செயற்திட்ட விரிவாக்கங்களுக்கு மேலதிக பலம் அளிக்கும் சக்தியாக அமையும்.
தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளான நவம்பர் 27 வீர வணக்க நாளைக் கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் கடந்த ஆண்டுகளில் மார்க்கம் ஃபெயர் கிரவுண்ட் வெளியரங்கத் திடலில் ஒரே இடத்தில் நான்கு நிகழ்வுகளாக எழுச்சி மிக்க கனடா வாழ் ஈழத் தமிழ் மக்களின் ஒன்றிணைந்த வருகையுடன் உணர்வு பூர்வமா நடாத்தியது. அதே போன்று, இந்த ஆண்டும் ஒன்ராரியோ மாகாணத்தில் மார்க்கம் ஃபெயர் கிரவுண்ட் வெளியரங்கத் திடலில் ஒரே இடத்தில் நான்கு நிகழ்வுகளாகத் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளைக் கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் நடாத்தவுள்ளது.
தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் கணக்கறிக்கையானது, கடந்த ஆண்டுகளில். கேணல். கிட்டு அவர்களின் வீர வணக்க நாளில் மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டு . ஊடகங்களுக்கும் அனுப்பப் பட்டு வந்துள்ளது. அதே போன்று இந்த ஆண்டுக் கணக்கறிக்கையும் வழமை போல் கேணல் கிட்டு அவர்களின் வீர வணக்க நாளில் மக்களுக்கு அறிவிக்கப்பட்டு ஊடகங்களுக்கும் அனுப்பப்படும்.
ஈழத் தமிழர்களின் தமிழீழத் தாயகக் கோட்பாட்டைத் தமது இலட்சியமாகக் கொண்டு எமது மக்களின் சுதந்திர நல்வாழ்வுக்காகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை வணங்கும் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளானது தாயகத்தில், மாவீரர் பணிமனையினால் மிகவும் சிறப்பாகக் கடைப்பிடிக்கக் பட்டதை நாம் அனைவரும் அறிவோம். எத்தகைய சூழ்நிலை தாயகத்தில் இருந்த போதிலும் கார்த்திகை மாதமானது, மாவீரர் மாதம் என்ற புனிதத் தன்மையோடு ஈழத்தமிழர்களால் உணரப்பட்டதையும் மாவீரர் வார நிகழ்வுகள் நடைமுறையில் இருந்ததையும். துயிலும் இல்ல வணக்க நடைமுறை விதிகளையும் ஈழத் தமிழர்களாகிய நாம் நன்கு உணர்ந்துள்ளோம். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் நடைமுறை விதிகளை அகவம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 அன்று கடைப்பிடித்து வருகின்றது.
ஓவ்வொரு ஆண்டும் வருகின்ற நவம்பர் 27 ஐ ஈழத்துக்கு அப்பால் மிக அதிக அளவில் வாழும் கனடிய மண்ணில் ஈழத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்று, ஒரே இடத்தில் வணங்கும்போது தான் மாவீரர்களின் ஈகமும், அவர்களின் இலட்சிய உறுதியும் மதிக்கப்படும். ஈழத் தமிழர்களின் தமிழீழக் கோட்பாட்டைத் தமது உயிர்க் கொடையால் உலகுக்குத் தெரியப்படுத்தியவர்களின் வணக்க நாளில், பல்லாயிரக் கணக்கான மக்கள் ஒரே இடத்தில் ஒன்றுபட்டு நின்று, மாவீரர்களின் இலக்கைக் கனடிய மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் தெரிவிப்போம். இது புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் அனைவரதும் கட்டாய கடமையாகும் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம். இந்த நாள் எமக்கான இலக்கை நோக்கி நாம் தொடர்ந்தும் செயற்படுவதற்கான உறுதி எடுக்கும் ஒரு நாள் என்பதையும் நாம் மாவீரர் நினைவோடு எழுச்சிபெறும் நாள் என்பதையும் எமது ஒன்றிணைந்த வருகையின் மூலம் இந்த ஆண்டும் உறுதிப்படுத்துவோம்.
தாயகத்தில் வாழும் மாவீரர் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளைச் செய்வதைக் கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் தனது மிக முதன்மையான பணிகளில் ஒன்றாகக் கருதுகின்றது. ஏற்கனவே திரட்டிய மாவீரர் குடும்ப விபரங்களோடு தொடர்ந்தும் சேகரித்து வரும் விபரங்களைப் பாதுகாப்பதும், உதவிகளைச் சரியான வழியில் செய்வதும் தொடர்ந்து ஆற்ற வேண்டிய மாவீரர் குடும்பம் சார்ந்த பணிகளுக்குப் பக்கபலமாக இருக்கும் என்பதை அறியத் தருகின்றோம்.
நவம்பர் 27 தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள், ஈழத் தமிழர்களின் தேசிய நாள் ஆகும். இந்த நாள் மாவீரர் பெற்றோர், மாவீரர் குடும்பத்தினர், உணர்வாளர்கள். இளையோர், கனடா வாழ் ஈழத் தமிழர்கள் என அனைவரும் மார்க்கம் ஃபெயர் கிரவுண்ட் வெளியரங்கத் திடலில், ஒரே இடதில் நடைபெறும் நான்கு நிகழ்வுகளில் இணைந்து. தேசத்தின் விடியலுக்காக விதைக்கப் பெற்ற வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்

No comments:

Post a Comment