May 14, 2015

புங்குடுதீவு மாணவி படுகொலை தொடர்பில் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு சிறீதரன் பா.உ. கடிதம்!

புங்குடுதீவில் மாணவியொருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வடக்கு மாகாண பிரதிபொலிஸ் மா அதிபருக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 4ம் வட்டாரத்தில் நேற்று புதன்கிழமை பாழடைந்த வீடொன்றில் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி பயிலும் சி.வித்தியா என்ற மாணவியை கடத்தி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்படும் செய்தி அறிந்து மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பொலிஸ் மற்றும் இராணுவம் கடற்படை என பாதுகாப்பு தப்பினர் வடக்கில் நிறைந்துள்ள சூழலில் மாணவியின் கொலையொன்று இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளதுடன் வடக்கில் காணப்படும் குற்றங்களோடு தொடர்புடையவர்கள் சம்பந்தமாக பொலிஸ் எடுக்கின்ற நடவடிக்கைகளில் மீது கேள்வி எழுந்துள்ளது.
தீவுப்பகுதிகளில் இராணுவம் கடற்படை என்பனவற்றின் அதிக பிரசன்னம் காரணமாக அப்பகுதிகளில் மக்கள் மீளக்குடியேறி வாழ்வதில் மந்த நிலை இருக்கின்ற நிலையில் இத்தகைய கொடுரமான வெறித்தனமான குற்றவாளிகளால் மேற்கொள்ளப்படும் சம்பவங்களால் வடக்கு மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
அண்மைய நாட்களாக வடக்கு மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் கொலை சம்பவங்களை தொடர்ந்து அறிகின்றோம்.
ஆகவே இவை உடனடியாக கட்டுப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு குறிப்பாக இளம் பெண்கள் மாணவிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன், குற்றவாளிகள் விரைந்து கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன்நிறுத்தி தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டுமென தங்களை வேண்டிநிற்கின்றேன் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்படுள்ளது.

No comments:

Post a Comment