July 9, 2016

கடைக்கு சென்ற போது இராணுவத்தினர் சுட்டனர்! குமரபுரம் படுகொலை வழக்கில் சாட்சியம்!

கடைக்கு சென்றபோது வீதியால் வந்த இராணுவத்தினரே துப்பாக்கியால் சுட்டனர் என திருகோணமலை குமரபும் படுகொலை வழக்கு குறித்து சாட்சியம் வழங்கிய ஒருவர் கூறியுள்ளார்.


கடந்த 1996ம் ஆண்டு குறித்த பகுதியில் இடம்பெற்ற இப்படுகொலையின் போது சுமார் 26 பேர் வரை கொல்லப்பட்டனர்.

இது குறித்த வழக்கு விசாரணைகள் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இன்று ஒன்பதாவது நாளாகவும் இடம்பெற்றது.

இதன் போது சாட்சியமளித்த 49 வயதான லட்சுமி என்பவர் இவ்வாறு கூறியுள்ளார். ”இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட ஆரம்பித்ததும் அந்தக் கடைக்குள் புகுந்து விட்டோம்.

இராணுவ வீரர்களில் ஒருவர், என்னை அழைத்து தப்பி ஓடுமாறு கூறினார். எனினும், கடைக்குள் இருந்த பலரையும் இராணுவத்தினர் சுட்டனர்.

இந்த சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டதுடன், சிலர் வெடி காயங்களுக்கு உள்ளாகியிருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றைய தினம் சாட்சியம் வழங்கிய இராசையா நாகேஸ்வரி என்பவர் குறிப்பிடுகையில், நான் வீதியால் சென்று கொண்டிருந்தேன்.

அந்த வீதியால் வந்த முஸ்லிம் நபர்கள் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்துகின்றனர் என கூறி அவசரமாக ஓடினார்கள்.

செய்வதறியாத நான், அருகில் இருந்த அழகுதுரை லட்சுமி என்பவரது வீட்டிற்குள் புகுந்தேன். அங்கு வந்த இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில், லட்சுமி உயிரிழந்தார். அதனை நான் நேரில் கண்டேன். எனினும், சம்பவத்தின் போது பதற்றத்திலிருந்தமையால் சுட்டவர் யாரென அடையாளம் தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றைய தினம் நான்கு பேர் சாட்சியமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment