September 2, 2016

பான் கீ மூன் வருகைக்கு எதிராக கொழும்பில் ஐ.நா அலுவலகம் முன் பிக்குகள் போராட்டம்!

ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கள பேரினவாத அமைப்பான ராவண பலய இன்று கொழும்பில் அமைந்துள்ள ஐ. நா அலுவலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பெருமளவு பௌத்த பிக்குகள் பங்கேற்றிருந்தனர்.கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தின் முன்பாக ஒன்றுகூடிய பிக்குகள் அலுவலகத்திற்கு உள்ளே செல்ல முயன்ற சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கும், அலுவலக அதிகாரிகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

பான் கீ மூன் தமிழ் மக்களுக்கு சார்பானவர் எனவும், சிங்கள மக்களின் பிரச்சினைகளை கண்டுகொள்வதில்லைஎனவும் பிக்குகள் கோஷங்களை எழுப்பியதோடு, அவரது விஜயத்திற்கு எதிர்ப்பினை வெளியிடும் வகையிலான பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

அங்கு கருத்து தெரிவித்த இத்தாகந்தே சத்தாதிஸ்ஸ, பான் கீ மூனிடம் நாம் எதனை எதிர்பார்கின்றோம் என்பதை தெளிவுபடுத்துவது எமக்கு கடினம். அமெரிக்க ஏகாதிபத்திய அரசினுடைய கட்டுப்பாடடில் இருக்கும் ஒரு நபர் என்ற வகையிலேயே நாம் அவரை பார்க்கின்றோம். நாட்டில் என்ன நடைபெற்றிருக்கின்றது என தெரிந்துகொள்ளாமல் எங்களுக்கு பதிலளிக்காமல், நீங்கள் எப்படி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ள முடியும்? எங்களது பிரச்சினைகள் நீங்கள் ஆராயவில்லை.

30 வருட யுத்த்தினால் பாதிக்கப்பட்டது நாங்கள். உயிர்களை படுகொலை செய்த சந்தர்ப்பத்தில் நாங்கள் நல்லிணக்கம் தொடர்பில் பேசினோம். தமிழீழ விடுதலைப்புலிகள் படுகொலைகளை புரிந்த சந்தர்ப்பத்தில் நாம் அமைதியாக இருந்தோம். சிங்கள மக்கள் படுகொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் நாங்கள் தமிழ் மக்களை படுகொலை செய்யவில்லை.

அவர்களுடன் நாங்கள் நல்லிணக்கத்துடன் இருந்தோம். எனினும் தற்போது ரணிலும், மைத்திரியும் நல்லிணக்கம் தொடர்பில் பேசுகின்றனர். எனினும் இருக்கும் நல்லிணக்கத்தை இல்லாமல் செய்ய முயற்சிக்க வேண்டாமென எச்சரிக்கை விடுக்கின்றோம் என தெரிவித்தார்.



No comments:

Post a Comment