September 1, 2016

கோலாலம்பூரில் உள்ள பத்துமலை முருகன் கோவிலை தாக்க முயன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது

கோலாலம்பூரில் உள்ள பத்துமலை முருகன் கோவில் அதிக பகதர்கள் வந்து செல்லும் வழிபாட்டுத்தலமாகத் திகழ்கிறது. இந்நிலையில் இந்த கோவில், பொழுதுபோக்கு மையம் மற்றும் காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 3 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை மலேசிய தீவிரவாத தடுப்புப்பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.


இன்று மலேசியா நாட்டின் சுதந்திர தினம் என்பதால் நேற்று மாலை இந்தத் தாக்குதலை நடத்திட தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்தது.

முதல் தீவிரவாதியை செலங்கோர் மாநிலத்தில் வைத்து கையெறி குண்டுகள், துப்பாக்கியுடன் கடந்த 27-ம் திகதியும், மற்ற இரண்டு தீவிரவாதிகளை 29-ம் திகதியும் பொலிஸார் கைது செய்தனர்.

தீவிரவாதிகள் கைது குறித்து காவல்துறை தலைவர் காலித் அபு பக்கர் கூறியதாவது:

லாரி டிரைவர், குளிர்பான விற்பனையாளர், இறைச்சி வெட்டுபவர் போன்ற போர்வையில் உலவிவந்த மூன்று தீவிரவாதிகளும் தாக்குதலுக்குப் பின்னர் சிரியா செல்ல திட்டமிட்டிருந்தனர்.

ஐ.எஸ். இயக்கத்தில் உள்ள மலேசிய தீவிரவாதியான ஜெடியிடம் இருந்து மூவருக்கும் தாக்குதல் உத்தரவு வந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் கோலாலம்பூரின் வெளியே உள்ள பார் ஒன்றில் தீவிரவாத அமைப்புகளின் முதல் தாக்குதல் நடந்தது. இதனைத் தொடர்ந்தே தற்போதைய தாக்குதலுக்கும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர முயன்றதாக 2013-ம் ஆண்டிலிருந்து இதுவரை 230 பேர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 200 பேர் மலேசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment