September 1, 2016

நியாயத் தீர்வை எதிர்பார்த்து நிற்கும் காணாமல் போனோரின் உறவினர்கள்!

நாட்டில் மூன்று தசாப்த காலம் நீடித்த யுத்தம் விட்டுச் சென்றுள்ள ஆழமான வடுக்களில் காணாமல் செய்யப்பட்டவர்கள் தொடர்பான விவகாரமும் முக்கியத்துவம் மிக்கதாகும்.


வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான சர்வதேச தினத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் மீண்டும் ஒரு தடவை இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

காணாமல் செய்யப்பட்டவர்கள் தொடர்பான சர்வதேச தினத்தின் நிமித்தம் வடக்கு, கிழக்கின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டங்களும் , ஊர்வலங்களும் நேற்று முன்தினம் இடம்பெற்றதோடு மகஜர்களும் கையளிக்கப்பட்டன.

அதேநேரம் பலவந்தமாகவும், வலிந்தும் காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களது பிரதிநிதிகள் பங்குபற்றிய தேசிய மாநாடு களனியில் நடைபெற்றது.

அதேவேளை விகாரமகாதேவி பூங்காவில் மற்றொரு அமைப்பு காணாமல் செய்யப்பட்டோர் விவகாரம் தொடர்பான கூட்டத்தை நடாத்தியது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காணாமல் போனவர்களின் உறவினர்கள் காணாமல் செய்யப்பட்டுள்ளவரின் புகைப்படங்களைக் கைகளில் ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

தங்கள் உறவுகளுக்காக நியாயம் பெற்றுத் தருமாறு கண்ணீர் சிந்தியபடி கோரிக்கைகளை முன்வைத்தனர்.

தம் தந்தை, தம் பிள்ளை, தம் கணவர் என்றபடி காணாமல் செய்யப்பட்டுள்ள உறவுகளை இழந்துள்ளவர்கள் தங்கள் தவிப்பையும், ஆதங்கத்தையும் மனவேதனையையும் இந்த ஆர்ப்பாட்டங்களிலும், ஊர்வலங்களிலும் வெளிப்படுத்தினர்.

தம் உறவுகள் காணாமல் போயுள்ளதால் அவர்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல.

பொருளாதார ரீதியிலும் பலவித அசௌகரியங்களுக்கும் அவர்கள் முகம் கொடுத்துள்ளனர்.

இந்நிலைமையிலிருந்து மீட்சி பெற எப்போது நியாயம் கிடைக்கப் பெறும் என்ற பாரிய எதிர்பார்ப்பு அவர்கள் மத்தியில் காணப்படுகின்றது.

உள்நாட்டு யுத்தம் 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இருந்தும் காணாமல் செய்யப்பட்டுள்ளவர்கள் விவகாரம் தொடர்பில் 2014ம் ஆண்டின் இறுதி வரையும் கடந்த ஆட்சியாளர்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்கவில்லை.

காணாமல் போயுள்ள தம் உறவுகளைத் தேடித் தருமாறு உறவினர்கள் விடுத்த கோரிக்கைகள் எதனையும் அவர்கள் கருத்தில் கொள்ளவுமில்லை.

ஆனால் இக்கோரிக்கை விடுத்தவர்கள் சந்தேகக்கண் கொண்டு நோக்கப்பட்டதுடன் சிலர் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டனர்.

அத்தோடு காணாமல் போயுள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று ஒழிந்திருப்பதாகக் கூட கடந்த ஆட்சிக் காலத்தில் கூறப்பட்டது.

குறிப்பாக ஒரிரு பாராளுமன்ற உறுப்பினர்கள், காணாமல் போனவர்கள் வெளிநாடுகளுக்கும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று ஒழிந்திருப்பதாகப் பாராளுமன்றத்திலேயே பகிரங்கமாகக் குறிப்பிட்டனர்.

அந்தளவுக்கு காணாமல் போனோர் விவகாரம் கடந்த ஆட்சிக் காலத்தில் வேடிக்கையான விவகாரமாகக் கையாளப்பட்டது.

இவ்விவகாரத்தை இவ்வாறு கையாள அவர்களுக்கு எவ்வாறு தான் மனநிலை வந்ததோ தெரியவில்லை. அந்தளவுக்கு அவ்வாட்சியில் மனிதாபிமானம் செயலிழந்திருந்தது.

இவ்வாறான நிலையில் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 09ம் திகதி நாட்டின் ஆட்சிப் பொறுப்பைக் கையேற்ற நல்லாட்சி அரசாங்கம் காணாமல் செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பான விவகாரத்தை ஆக்கபூர்வமான முறையில் கையாண்டு வருகின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலின் போது நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நல்லாட்சி அரசாங்கம் இவ்விவகாரத்தைக் கையாளும் விதம் காணாமல் போனவர்களது உறவினர்கள் மத்தியில் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த அடிப்படையில்தான் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டம் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

காணாமல் செய்யப்பட்டவர்கள் தொடர்பான சர்வதேச தினத்தில் காணாமல் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு கிழக்கில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட அதேநேரம் களனியில் நடைபெற்ற பலவந்தமாகவும், வலிந்தும் காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களது பிரதிநிதிகள் பங்குபற்றிய தேசிய மாநாட்டில் ஐந்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதில் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் ரூபா நஷ்டஈடாக வழங்கப்பட வேண்டும் என்ற யோசனை தீர்மானமாக நிறைவேற்றுவதற்கு முன்வைக்கப்பட்டது.

இருப்பினும் இம்மாநாட்டில் பங்குபற்றிய காணாமல் போனவர்களின் உறவினர்கள் நஷ்டஈட்டுத் தொகையை இவ்வாறு வரையறுக்காது தமக்கு மாதா மாதம் கொடுப்பனவு தொகையொன்று வழங்கப்பட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தனர்.

இந்த யோசனை இம்மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன்படி காணாமல் செய்யப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் பொருளாதாரக் கஷ்டங்களுக்கும், சிரமங்களுக்கும் முகம் கொடுத்திருப்பது நன்கு புலப்படுகின்றது.

ஆகவே காணாமல் செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கின்ற போதிலும் தங்களது உறவினரை விரைவாகத் தேடித் தாருங்கள் அல்லது தங்களுக்கு விரைவாக நியாயம் பெற்றுத் தாருங்கள் என்பதையே நேற்று முன்தினம் வடக்கு கிழக்கு, பிரதேசங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

அதனால் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்படும் அரசாங்கம் இவ்விடயத்திலும் கவனம் என்பதில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உறுதியாக உள்ளனர்.

No comments:

Post a Comment